37th Cultural Concert

மாலை பிரிஸ்பேன் தமிழ் பள்ளியின் 37ஆம் ஆண்டு கலைவிழா.அரங்கத்தினுள் நுழைந்ததுமே அழகாக அலங்கரிக்கப்பட்ட மேடை கண்களை ஈர்த்தது.வாசலில் தரப்பட்ட விழா மலர் ஒரு அழகிய மலரை ஏந்தும் உணர்வையும் தந்தது.
நேர்த்தியான வடிவமைப்பு,உள்ளடக்கம்,அத்திவாரமாக அமைந்த அத்தனை பேரையும் பதிவு செய்திருந்தமை என விழா மலர் வெறும் மலராக அமையாமல் ஒரு வரலாற்றுப் பதிவாக இருந்தது.உள்ளே மாணவர்களின் ஆக்கங்கள் வாசிக்கத் தூண்டின.ஒரு மாணவர் இயந்திரமனிதன் ஒருவனை வரைந்து கொஞ்சம் கொஞ்சமாக மனிதன் இயந்திரமாகிறான்,இயந்திரமோ மனிதனாகிறது என்று எழுதியிருந்ததை வாசித்து சிரித்தாலும் சிந்திக்கவும் வைத்தது.

கலை நிகழ்ச்சிகளில்
இயல்,இசை,நாடகம் என முத்தமிழும் முகிழ்ந்து சிரித்தன.சமூகத்திற்கு தேவையான பல நல்ல கருத்துகளை வாரியளித்தார்கள்.
தாய் மொழி,அதன் முக்கியத்துவம்,கற்க கிடைக்கும் வாய்ப்புகள், அடுத்த ஆண்டில் இருந்து ( 2023) தமிழ் குயீன்ஸ்லாந்தின் பொது பாடத்திட்டத்தில் கற்கக்கூடிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டமை எனும் நற்செய்தி ,அத்தனையையும் அழகாகச் சொன்னார்கள்.

அறம்,பெண்களுக்கான சம உரிமை, இயற்கை,இயற்கைசார் வாழ்க்கை,தமிழரின் வீரவிளையாட்டுகள்,கொரோனாவின் பிடியில் சிக்கிய தேவலோகத்தினர் என பலவிதமான கருக்களைக் கொண்ட நாடகங்கள் நம்மையும் சிந்திக்க வைத்தன.அதுவும் ஏறு தழுவும் வீரவிளையாட்டை தத்ரூபமாக நடித்து நம் கண்களுக்கு விருந்தளித்தார்கள்.

பள்ளியின் பழைய மாணவர்கள் பலரும் சிறுவர்களுக்கு பயிற்சியளித்திருந்தார்கள்.அது ஒரு பரம்பரையை உருவாக்கி வருவதாக மனதிற்குப் பட்டது.பாராட்டுகள்.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக முக்கிய விருந்தினர்கள் ஆற்றிய சிற்றுரைகள் அமைந்தன.கிரிபித் தொகுதி உறுப்பினர் மாண்புறு மாக்ஸ் சாண்ட்லர் தம் உரையில் ஆஸ்திரேலியாவில் பன்முகக்கலாசாரத்தினால் ஏற்படும் நன்மைகளை,அது திடமான ,சீரான வருங்கால சந்ததியினரை உருவாக்குவதில் செய்யும் பங்களிப்பை தெளிவாக எடுத்துரைத்தார்.

தமிழ் வேர்களைக் கொண்டவரும்,பிரிஸ்பேன் தமிழ் பள்ளியின் முன்னைய மாணவரும்,காபா தொகுதியின் நகரசபை உறுப்பினரும் ,
ஜனாதன் ஸ்ரீ என்று அறியப்படுபவருமான மற்றைய முக்கிய விருந்தினர், இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்னும் உண்மையை தமிழிலும்,ஆங்கிலத்திலும் மாணவர்களுக்கேற்ற வகையில் சொன்னார்.

தான் சிறுபான்மையினனாக,வேறு ஒருவனாக,மாற்றானாக சிரமப்படக் கூடாது என்பதால் தன் பிறப்பில் தன் பெற்றொர் ஸ்ரீரங்க நாதன் எனும் தன் இயற்பெயரை சுருக்கி ஸ்ரீ என்று பதிவு செய்திருந்தார்கள்.ஆனால் அது தவறான முடிவு, சுயம் என்பது மிக முக்கியம்.ஆஸ்திரேலியனாக இருப்பதால் தமிழன் என்ற தன் தனித்துவத்தை அடையாளத்தைத் தான் இழக்கக் கூடாது.சுயத்தை தக்கவைத்துக் கொள்வது வாழ்க்கையின் முக்கியமான அத்திவாரம் எனவே அண்மையில் ஸ்ரீ எனும் தன்பெயரை மீண்டும் முழுமையாக ,ஸ்ரீரங்க நாதன் என்று உத்தியோகபூர்வமாக மாற்றியுள்ளேன் என்பதை சுயமரியாதையுடன்,சுய அடையாளத்துடன் அவைக்கும் உலகிற்கும் உரக்கச் சொன்னார்.

தானும் நாமும் தமிழ் ஆஸ்திரேலியர்கள் என்பதைத் திடமாய் சொன்னார்.

புலம் பெயர்ந்தால்,பெயர்க்கப்பட்டதால் வாடும் மனங்களுக்கு, நம் வேருக்கு நீராய் அமைந்தன அவரது வார்த்தைகள்.

தமிழ் – நம் வேருக்கு நீர்

Source: வாசி

Tags : Cultural concert, Brisbane Tamil school

Events
Share This :